முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரஸாக், 1எம்டிபி ஊழல் வழக்கில் விதிக்கப்பட்ட 15 ஆண்டு சிறைத் தண்டனையையும் 11.38 பில்லியன் ரிங்கிட் அபராதத்தையும் மேல்முறையீடு முடியும் வரை நிறுத்திவைக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நீதிபதி நூர் ருவேனா முஹமட் நுர்டின் இன்று இந்த முடிவை அறிவித்தார்.

2.3 பில்லியன் ரிங்கிட் 1எம்டிபி நிதி தொடர்பான நான்கு அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள், 21 பணமோசடிக் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து நஜிப் மேல்முறையீடு செய்துள்ளார்.
நஜிப்பின் உடல்நிலை மோசமடைந்து வருவதையும், அவருக்கு பல்வேறு நீண்டகால நோய்கள் இருப்பதையும் சுட்டிக் காட்டி, அவரது வழக்கறிஞர் டான் ஶ்ரீ முஹமட் ஷாஃபி அப்துல்லா தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரினார்.
ஆனால், சிறையில் அவருக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சை வழங்கப்படுவதைத் தடுக்கும் சூழல் இருப்பதற்கான ஆதாரம் இல்லை என்றும், தண்டனையை ஒத்திவைக்க வேண்டிய விசேஷக் காரணங்கள் நிரூபிக்கப்படவில்லை என்றும் அரசுத் தரப்பு வாதிட்டது.








