அரசியல் கட்சிகளின் இளைஞர் பிரிவுகளில், ஜசெக.வின் டாப்சி மட்டுமே சீனப் புத்தாண்டு, ஹரிராயா, தீபாவளி ஆகிய மூன்று முக்கியப் பண்டிகைகளையும் முன்னிட்டு ஊடகவியலாளர்களுக்கு விருந்து உபசரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளதாக அதன் தேசியத் தலைவர் வூ கா லியோங் தெரிவித்துள்ளார்.
கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தாம் பொறுப்பேற்றது முதல், ஊடகத்துறையினருடன் நல்லுறவை வளர்க்கும் நோக்கில் இத்தகைய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு மூன்று பண்டிகைகளுக்கும் உபசரிப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது முறையாக தீபாவளி ஊடகவியலாளர் சந்திப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த தீபாவளி உபசரிப்பு நேற்று செவ்வாய்க்கிழமை மாலையில் கோலாலம்பூர் பங்சார் பகுதியில் உள்ள விஇ ஹாட்டல் & ரெசிடென்சில் நடைபெற்றது.
எந்தவோர் அரசியல் கட்சிகளின் இளைஞர் பிரிவும் கவனம் செலுத்தாத இது போன்ற விருந்து உபசரிப்புக்கு டாப்சி உரிய முக்கியத்துவம் அளித்து வருவதாக வூ கா லியோங் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் டாப்சியின் தேசியச் செயலாளர் லீ ஹூய் யீ, விளம்பரச் செயலாளர் ஹோ சி யாங், துணைத் தலைவர்கள் ஹாரிஸ் லினேஷ் செல்லுவாண்டான், அன்னுன் நான்சி, தேசிய அமைப்புச் செயலாளர் லிம் ஸெங் ஹான், அனைத்துலக விவகாரத் துணைச் செயலாளர் குசாலினி மகேந்திரன், பல்கலைக்கழக விவகார இயக்குநர் கோ லிங் ஸியான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.








