மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் பாலியல் வன்முறை தீர்ப்பாயமான தக்ஸ் (TAGS), கடந்த இரண்டு ஆண்டுகளில் 134 பாலியல் தொல்லை புகார்களை பெற்றுள்ளதாக அமைச்சர் டத்தோ ஶ்ரீ நான்சி ஷுக்ரி தெரிவித்துள்ளார்.
அவற்றில் 90 புகார்கள் வெற்றிகரமாகத் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி தொடங்கப்பட்ட தக்ஸ் அமைப்பானது, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் நிவாரணம் மற்றும் தீர்வைப் பெறுவதற்கான முக்கிய தளமாக செயல்பட்டு வருவதாகவும் நான்சி தெரிவித்துள்ளார்.
இந்த எண்ணிக்கையில் அமைச்சக அலுவலகங்களில் பெறப்பட்ட புகார்கள் மட்டுமே இடம் பெற்றுள்ள நிலையில், போலீசில் அளிக்கப்பட்ட புகார்கள் இதில் சேர்க்கப்படவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
ஆண்கள் மற்றும் சிறார்களும் தக்ஸ் மூலம் நிவாரணம் கோரலாம் என தெரிவித்த அமைச்சர், இந்த ஆண்டு இதுவரை நான்கு ஆண்கள் தீர்ப்பாயத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும் சில புகார்தாரர்கள் வழக்கில் வெற்றி பெற்று இழப்பீடும் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை நாடு முழுவதும் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளன.
அவற்றில் சபாவில் மட்டும் 424 வழக்குகள் பதிவாகியுள்ளன.
பாலியல் துன்புறுத்தல் அல்லது வன்முறைக்கு ஆளானவர்கள் தயக்கமின்றி உரிய வழிகளில் புகார் அளிப்பதுடன், வழக்கிற்கு உதவும் ஆதாரங்களையும் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் என செம்போர்னாவில் நேற்று நடைபெற்ற பாலியல் வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த நான்சி இதனைத் தெரிவித்துள்ளார்.








