மேன்மை தங்கிய சிலாங்கூர் மாநில சுல்தான் சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா அவர்களின் 25 ஆண்டு கால ஆட்சியைக் கொண்டாடும் வகையில், வரும் அக்டோபர் 25-ஆம் தேதி சிறப்பு பொது விடுமுறை என சிலாங்கூர் மாநில அரசு அறிவித்துள்ளது.
அக்டோபர் 25 -தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், அதற்குப் பதிலாக அக்டோபர் 26-ஆம் தேதி திங்கட்கிழமை மாற்று பொது விடுமுறையாக வழங்கப்படும் என சிலாங்கூர் மாநிலச் செயலாளர் டத்தோ டாக்டர் அஹ்மாட் ஃபாட்ஸ்லி அஹ்மாட் தஜுடின் தெரிவித்துள்ளார்.
இந்த விடுமுறை, கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி சுக்மா 2026 வெற்றியை முன்னிட்டு வழங்கப்பட்ட சிறப்பு விடுமுறையைப் போன்றே நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிலாங்கூரில் பணியாற்றும் மத்திய மற்றும் மாநில அரசாங்க ஊழியர்களுக்கு இது பொருந்தும்.
தனியார் நிறுவனங்கள், தங்களது பணிச்சூழல் மற்றும் சேவைத் தேவைகளை கருத்தில் கொண்டு ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
சுல்தானின் வெள்ளி விழாவை முன்னிட்டு செப்டம்பர் 28 முதல் நவம்பர் 1 -ஆம் ஆண்டு தேதி வரை சுமார் 20 நிகழ்ச்சிகள் மற்றும் அதிகாரப்பூர்வ நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
நிகழ்ச்சிகளின் முழுமையான பட்டியல் பெஜாபாட் செத்தியாஉசாஹா கெராஜான் நெகிரி சிலாங்கூர் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








