கோத்தா பாரு, ஜனவரி.03-
கிளந்தான் மாநிலத்தில் குற்றங்களுக்கு எதிரான போலீசார் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட கும்பல் ஒன்று, தமக்கு எதிராக மிரட்டல் விடுத்திருப்பதை அம்மாநில போலீஸ் தலைவர் டத்தோ முஹமட் யுசோஃப் மாமாட் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த டிசம்பர் 22ஆம் தேதி, பாச்சோக் மாவட்டம் குனோங் பகுதியில் உள்ள மாநில துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தின் சுவரில், சிவப்பு மையால் எழுதப்பட்ட அந்த மிரட்டல் வாசகம் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘ஆலோங்’ என்றழைக்கப்படும் கடன் முதலைகள் உள்ளிட்ட, குற்றங்களில் ஈடுபடும் சில கும்பல்களுக்கு எதிராக, போலீசார் கடுமையாக நடவடிக்கை எடுத்ததன் காரணமாக, அதிருப்தியடைந்தவர்கள் இது போன்ற செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் முஹமட் யுசோஃப் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கிளந்தான் போலீஸ் தலைவருக்கு எதிரான “Jangan Lari Dato KP” என்று மிரட்டல் வாசகத்தின் புகைப்படங்களானது சமூக ஊடகங்களில் பரவியது குறிப்பிடத்தக்கது.








