ஈப்போ, ஆகஸ்ட்.16-
கடந்த ஓர் ஆண்டில் லஞ்ச ஊழல் தொடர்பில் 500 கோடி ரிங்கிட் வெற்றிகரமாகக் கைப்பற்றப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
லஞ்ச ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை மீதான நிர்வாகத்தை வலுப்படுத்தவும், தீவிரப்படுத்தவும் அரசாங்கம் மேற்கொண்ட முயற்சியின் பலாபலனாக இந்த வெற்றி கிடைத்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
இதுநாள் வரையில் மக்களுக்கு பெரும் சுமையாகவும், தேசிய வளர்ச்சிக்குத் தடையாகவும் இருந்த லஞ்ச ஊழல் நடைமுறைகளிலிருந்து நிர்வாக முறையை தூய்மைப்படுத்துவதற்கு மடானி அரசாங்கம் முழு வீச்சில் மேற்கொண்ட நடவடிக்கையின் விளைவாகவே இந்த அடைவு நிலை கிட்டியுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.
சிலர், நாட்டின் நிர்வாகத்தைப் பற்றியும், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை பற்றியும் கிண்டலாகவும், இழிவாகவும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
எனவேதான் லஞ்ச ஊழலை வேரறுக்க மேற்கொண்ட முயற்சியில் கடந்த ஓராண்டில் எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த மடானி அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாக அன்வார் விளக்கினார்.
அமைச்சுகள், இலாகாக்கள், குடிநுழைவுத்துறை, சுங்கத்துறை ஆகியவற்றில் தொடங்கி அரசியல் தலைவர்கள் வரை பலதரப்பட்ட ஏஜென்சிகளிடமிருந்து 400 கோடி ரிங்கிட் முதல் 500 கோடி ரிங்கிட் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக டத்தோ ஶ்ரீ அன்வார் விளக்கினார்.
சுருங்கச் சொன்னால் எங்களின் திறன் மற்றும் செயல்பாடு திடமான உறுதியுடன் இருந்ததால் நாட்டின் நல்லாட்சிக்கான பிரதானத் தூணான நிர்வாக முறையைச் சுத்தப்படுத்த முடிந்து என்று டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
இன்று சனிக்கிழமை ஈப்போ ரயில் நிலைய வளாகத்தில் ஈப்போ சென்ட்ரல் மேம்பாட்டுத் திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் டத்தோஸ்ரீ அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.








