கோலாலம்பூர், செப்டம்பர்.20-
சின் சியூ டெய்லி சீன நாளிதழ், சீனார் ஹரியான் மலாய் நாளிதழ் ஆகியவற்றுக்கு தலா ஒரு லட்சம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பது மூலம் மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி கடும் கண்டனத்திற்கு ஆளாகியது.
அண்மையில் அமைக்கப்பட்ட மலேசிய ஊடகவியலாளர் மன்றம் உட்பட மூத்தப் பத்திரிகையாளர்கள், எம்சிஎம்சியின் நடவடிக்கைக்கு தங்களின் ஆட்சேபத்தையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
எம்சிஎம்சியின் நடவடிக்கை ஒரு தவறான முன்னுதாரணமாகும் என்பதுடன் ஓர் ஆபத்தான செயலாகும். இது மலேசியாவின் ஊடகச் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் கொள்கைகளைக் குறைத்து எடை போடும் முயற்சியாக இருக்கலாம் என்று மூத்த பத்திரிகையாளர் ஜொஹான் ஜாஃபார் வர்ணித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனங்களையும், மாறுபட்ட கருத்துகளையும் சகித்துக் கொள்வதற்கு திறன் இல்லை என்பதைப் போல் ஒரு தோற்றத்தை எம்சிஎம்சி ஏற்படுத்துகிறது. இது பத்திரிகை சுதந்திரத்திற்கு பிரதமரே வெளிப்படுத்திய நிலைப்பாட்டிற்கு முரணாக உள்ளது என்று தொக்கோ விருதைப் பெற்ற தலைமை பத்திரிகையாளரான ஜொஹான் ஜாஃபார் கூறுகிறார்.
ஒரு பத்திரிகையை அல்லது ஊடகத் தளத்தை நிர்வகிப்பதில் தவறுகள் நிகழலாம். ஊடகத் துறையில் தவறுகள் என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகும். டிஜிட்டல் தொழில்நுட்பமும், AI வரவும் ஒரு பிளேடு கத்தியில் இருக்கும் இரு முனைகள் போன்றதாகும். நமது முன்னேற்றத்திற்கான நன்மைகள் எவ்வளவு உள்ளதோ, அதே போன்று அதில் உள்ள ஆபத்துகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அத்தகைய தவற்றின் மூலம் நம்மைத் திருத்திக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
முழுமையற்ற ஜாலோர் கெமிலாங் கொடியைப் பிரசுரித்ததற்கு AI தொழில்நுட்பத்தில் நேர்ந்த தவறு என்பதை சின் சியூ டெய்லி சீன நாளிதழ், தெளிவாக விளக்கி விட்டது. அதற்கான பகிரங்க மன்னிப்பையும் கேட்டுக் கொண்டது. பொறுப்பாசிரியரையும் இடை நீக்கம் செய்து விட்டது.
இந்நிலையில் வேறு அரசு இலாகாக்களைக் காட்டிலும் எம்சிஎம்சி, இந்த பிரச்னையில் தீவிர கவனம் செலுத்தியதும், அதிகபடியான அபராதத் தெகையையும் விதித்து இருப்பதும் விந்தையாக உள்ளது. புதிய தொழில் நுட்பத்தில் தீவிர உஷார் நிலையிலும் நம்மை மீறி நிகழக்கூடிய தொழில்நுட்பத் தவறுகளை எம்சிஎம்சி புரிந்து கொள்ள வேண்டும் என்று ஜொஹான் ஜாஃபார் வலியுறுத்தியுள்ளார்.








