மலேசியாவின் தேசிய வளர்ச்சி திட்டத்தில் இந்திய சமூகத்தினர் ஒருபோதும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள் என்றும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மடானி அரசாங்கம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வருவதாகவும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.
இந்திய சமூகத்தைச் சேர்ந்த தொழில்முனைவோருக்கான நிதி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா-வை வலுப்படுத்துதல், டிவெட் எனப்படும் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி பயிற்சிகளை மேம்படுத்துதல், இளைஞர்களின் வளர்ச்சிக்காக வழிகாட்டி–வழிகாட்டப்படுபவர் திட்டங்களை உருவாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அன்வார் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கல்வி, தொழில்முனைவு, சிறு நிதியுதவி, நலத்திட்டங்கள் மற்றும் குடும்பங்களின் சுமையை குறைப்பதற்கான ரொக்க உதவிகள் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும் என்றும் அன்வார் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் இந்திய சமூகத் தலைவர்களுடன் நடைபெற்ற சந்திப்புகளிலும், மடானி அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதன் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ததுடன், இந்திய சமூகத்தினர் சார்பில் முன்வைக்கப்பட்ட கருத்துகள் மற்றும் இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்ததாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வறுமை, குடியுரிமை மற்றும் அரசாங்க உதவிகளைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள் உள்ளிட்ட மீதமுள்ள இடைவெளிகள் விரைவாகவும் திறம்படவும் தீர்க்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அனைத்து அமைச்சுகள் மற்றும் அரசு நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, சேவை வழங்கும் முறையை மேம்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
அரசாங்கம் ஒதுக்கும் நிதியும் செயல்படுத்தப்படும் கொள்கைகளும் அவற்றின் இலக்கு மக்களைச் சென்றடைந்து, அவர்களின் வாழ்க்கையில் உண்மையான மற்றும் கண்கூடான முன்னேற்றத்தை ஏற்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தியுள்ளார்.








