கெடா மாநிலம் குருன் பகுதியில் இரண்டு லாரிகளுக்கு இடையில் மோட்டார் சைக்கிள் சிக்கி நசுங்கியதில், அதனை ஓட்டிச் சென்ற 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த சிறுவன் முஹம்மத் இல்ஹாம் ஃபிர்தௌஸ் முகமது இருவான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் பெண்டாங் பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் ஆறாம் ஆண்டு மாணவர் என கோலா மூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஹான்யான் ரம்லான் தெரிவித்துள்ளார்.
நேற்று செப்டம்பர் 3-ஆம் தேதி பிற்பகல் சுமார் 2 மணியளவில் மஸ்ஜித் பத்து 3, ஜாலான் ஜெனியாங், குருன் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், போக்குவரத்து விளக்கு சிவப்பு நிறமாக மாறியதைத் தொடர்ந்து முன்னால் சென்ற கார் ஒன்று திடீரென நிறுத்தப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து பின்னால் வந்த லாரியும் திடீரென நின்றதும் தெரியவந்துள்ளது.
இதனால் அந்த லாரியின் பின்பகுதி கட்டுப்பாட்டை இழந்து சறுக்கியதுடன், அருகில் சென்று கொண்டிருந்த சிறுவனின் மோட்டார் சைக்கிளை மோதியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.








