கடந்த தேர்தல்களில் பாஸ் கட்சி வெற்றி பெற்ற நாடாளுமன்ற மற்றும் மாநிலத் தொகுதிகளை எதிர்வரும்ம் தேர்தல்களிலும் தக்கவைத்துக்கொள்ள கட்சி தீவிரமாக செயல்பட வேண்டும் என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பெரிக்கத்தான் நேஷனல் தலைமையிலான கிளந்தான், திரெங்கானு, கெடா மற்றும் பெர்லிஸ் ஆகிய நான்கு மாநிலங்களையும் உள்ளடக்கிய SG4 கூட்டணியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 15-ஆவது பொதுத்தேர்தலில் பாஸ் மொத்தம் 43 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றது.
அதேபோல், 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில் கிளந்தானில் 37, திரெங்கானுவில் 27, கெடாவில் 21 மாநிலத் தொகுதிகளை பாஸ் கைப்பற்றியது.
மேலும், பெர்லிஸில் பாஸ் கட்சிக்கு 9 மாநிலத் தொகுதிகள் உள்ளன.
இந்நிலையில், இந்த மாநிலங்களின் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதுடன், நிர்வாகத்தை மேம்படுத்தி, இஸ்லாமிய கொள்கைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஹாடி அவாங் கட்சித் தலைவர்களை வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில், அரசின் சாதனைகள் குறித்து மக்களுக்கும் வாக்காளர்களுக்கும் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்றும் பாஸ் முக்தமர் கூட்டத்தில் ஆற்றிய உரையில் ஹாடி அவாங் குறிப்பிட்டுள்ளார்.








