Dec 16, 2025
Thisaigal NewsYouTube
டுரியான் துங்காலில் 3 இந்திய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: கொலை குற்றச்சாட்டின் கீழ் விசாரணை
தற்போதைய செய்திகள்

டுரியான் துங்காலில் 3 இந்திய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: கொலை குற்றச்சாட்டின் கீழ் விசாரணை

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.16-

கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் தேதி மலாக்கா, டுரியான் துங்காலில் மூன்று இந்திய இளைஞர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையை கொலையாக மறுவகைப்படுத்துமாறு சட்டத்துறை அலுவலகம் இன்று தடாலடியாக போலீஸ் துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் அளித்துள்ள விளக்கம் மற்றும் விசாரணை தொடர்பில் அது வழங்கிய பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு, மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கொலைக் குற்றச்சாட்டாகக் கொண்டு வருவதற்கு வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணையைத் தொடங்குமாறு போலீஸ் துறைக்கு சட்டத்துறை அலுவலகம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக சட்டத்துறை அலுவலகம் இன்று ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வெளிப்படையாகவும், பாரபட்சமின்றியும் விசாரிக்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நாடாளுமன்றத்தில் உறுதி அளித்த அடுத்த 8 மணி நேரத்தில் சட்டத்துறை அலுவலகம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மேலும் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் இன்று சட்டத்துறை அலுவலகத்தில் வழங்கியிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்து இருந்தார்.

இந்தச் சம்பவத்தில் 21 வயது எம். புஸ்பநாதன், 24 வயது டி. புவனேஸ்வரன் மற்றும் 29 வயது ஜி.லோகேஸ்வரன் ஆகிய மூன்று இளைஞர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த மூவரையும் கொள்ளையர்கள் என்று வகைப்படுத்தி செய்தியாளர்கள் கூட்டத்தை நடத்திய மலாக்கா மாநில போலீஸ் தலைவர் ஸுல்கைரி முக்தார், மூவரும் போலீஸ்காரர்களை வெட்டுக் கத்தியால் தாக்கினார்கள் என்றும், போலீஸ்காரர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளத் துப்பாக்கி பிரயோகம் நடத்தியதில் மூவரும் செம்பனைத் தோட்டத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் அறிவித்து இருந்தார்.

எனினும் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்கள் சார்பில் இந்த வழக்கை முன்னெடுத்த லிபர்ட்டி அமைப்பு வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜன் மற்றும் ஆகம அணியின் தலைவர் அருண் துரைசாமி, மலாக்கா போலீஸ் தலைவரின் இந்த வாதத்தை மறுத்தனர். போலீஸ் துறை பொய்யான அறிக்கையை வெளியிட்டுள்ளது என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார்கள்.

அந்த மூன்று இந்திய இளைஞர்களையும் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையோரத்தில் காரிலிருந்து இறங்கச் சொல்லி, கைவிலங்கிடப்பட்டப் பின்னர், மரணத் தண்டனை நிறைவேற்றும் வகையில் போலீஸ்கார்கள் சுட்டுக் கொன்றனர் என்று வழக்கறிஞர் ராஜேசும், அருண் துரைசாமியும் வாதிட்டனர்.

தங்கள் வாதத்திற்கு வலு சேர்க்கும் வகையில் சுட்டுக் கொல்லப்பட்ட மூவரில் ஒருவரின் மனைவி, கடைசி 13 நிமிடத்தில் என்ன நடந்தது என்பதற்கு ஆதாரமாக அவர் பதிவு செய்த ஆடியோ உரையாடலை ராஜேசும், அருண் துரைசாமியும் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்தச் சம்பவத்தில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

இந்தத் துப்பாக்கிச் சுட்டுச் சம்பவத்தைக் கொலையாக இன்று மறு வகைப்படுத்தியுள்ள சட்டத்துறை அலுவலகம், இது குறித்து தீர்க்கமாக முடிவு எடுப்பதற்கு முன்னதாக விசாரணையை முடிக்க போலீஸ் துறையிடமிருந்து மேலும் விசாரணை அவசியம் என்று உத்தரவிட்டுள்ளது.

Related News