கோலாலம்பூர், செப்டம்பர்.29-
மலேசியாவிற்கு வருகை புரிவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு குறித்து பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங், அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபரை மிகப் பெரிய சாத்தான் என்று வர்ணித்த ஹாடி அவாங், பாலஸ்தீனத்தில் குறிப்பாக காஸாவில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்டு வரும் அட்டுழியங்களுக்கு இஸ்ரேலுடன் அமெரிக்கா, கைக்கோர்த்து இருப்பது, பகிரங்கமாக தெரிகிறது என்று ஹாடி அவாங் குறிப்பிட்டார்.
அடுத்த மாதம் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் 47 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கு வருகை புரிவதற்கு ஆசியான் தலைவர் என்ற முறையில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், அமெரிக்க அதிபருக்கு விடுத்துள்ள அழைப்பு தொடர்பில் இன்று கருத்துரைக்கையில் அந்த மதவாதக் கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.








