கோலாலம்பூர், டிசம்பர்.09-
மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் போலீஸ் துறையினரின் சில தவறான நடத்தை குறித்து விசாரணை செய்வதற்கும், உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைப்பதற்கும் IPCMC ஆணையம் அமைக்கப்படுவதே சிறந்த தீர்வாக இருக்க முடியும் என்று பாசீர் கூடாங் பிகேஆர் எம்.பி.யும், சட்ட வல்லுநருமான ஹசான் அப்துல் காரீம் அரசாங்கத்திற்கு மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
போலீஸ் துறையின் சில தவறான நடத்தை குறித்து விசாரணை செய்வதற்கு தற்போது IPCC ஆணையம் உள்ளது. ஆனால், அது ஒரு தோல்வியடைந்த அமைப்பாக, வெறுமனே அலங்காரப் பொருளாகக் காட்சி அளிக்கிறது.
IPCC- க்கு பதிலாக போலீஸ் தொடர்பான புகார்கள் மற்றும் தவறான நடத்தை குறித்து விசாரிக்க IPCMC போன்ற ஒரு சுயேட்சை மற்றும் நம்பகமான ஓர் ஆணையத்தை அரசாங்கம் நிறுவ வேண்டும் என்று அந்த பிகேஆர் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
போலீஸ் தடுப்புக் காவல் மரணங்கள் மற்றும் சந்தேக நபர்களின் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட பல சம்பவங்கள் மற்றும் துயரங்கள் நாட்டில் நிகழ்ந்துள்ளன. இவற்றுக்குத் தீர்வு காண மலேசியாவிற்கு வலுவான - நம்பகமான IPCMC போன்ற ஆணையம் தேவை என்று தாம் உறுதியாக நம்புவதாக ஒரு வழக்கறிஞரான ஹசான் அப்துல் காரீம் குறிப்பிட்டார்.
அரச மலேசியப் போலீஸ் படை போன்ற நாட்டின் பாதுகாப்பு ஏஜென்சிகளில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைப் பேணப்படுவதற்குத் தேவையான மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் கொண்டு வருவதற்கு முந்தைய PH 1.0 அரசாங்கமும், தற்போதைய PH 2.0 அரசாங்கமும் வாக்குறுதிகளை அளித்தன.
ஆனால், அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல், புறக்கணிக்கப்பட்டு வருவது பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தம்மை வருத்தம் அடையச் செய்கிறது என்பதுடன் இது மக்களுக்கு இழைக்கப்பட்ட ஒரு துரோகச் செயலாகத் தாம் கருதுவதாக ஹசான் அப்துல் காரீம் தெரிவித்தார்.
கடந்த மாதம் மலாக்கா, டுரியான் துங்காலில் மூன்று இளைஞர்கள், போலீசாரல் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமானது, IPCMC ஆணையம் அமைக்கப்பட வேண்டிய அவசியத்தை, அரசாங்கம் இனியும் ஒத்திவைக்க முடியாது என்று அவர் அறிவுறுத்தினார்.
நாம் நேசிக்கும் இந்த நாட்டில் நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை மக்கள் மனங்களிலிருந்து தகர்க்கப்படுமானால், நம்பிக்கை அரசாங்கம் என்று கூறிக் கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று ஹசான் அப்துல் காரீம் வினவினார்.








