சிரம்பான், ஜூலை.19-
வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள 16-வது நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, கடந்த ஜூலை 18 முதல் பெறப்பட்ட 19 தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளுக்கான அனுமதி விண்ணப்பங்களுக்கு போலீசார் ஒப்புதல் வழங்கியுள்ளனர்.
இது குறித்து மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்ஃஸப்னி அஹ்மாட் கூறுகையில், அனைத்து விண்ணப்பங்களும் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்ததையடுத்து அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், அனைத்து கூட்டங்களும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறுகின்றனவா? என்பதையும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு இணங்க உள்ளனவா? என்பதையும் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக இதுவரை ஒரே ஒரு போலீஸ் புகார் மட்டுமே பெறப்பட்டுள்ளதாகவும், அது குறித்து இதுவரை எந்த விசாரணை ஆவணமும் திறக்கப்படவில்லை என்றும் டத்தோ அல்ஃஸப்னி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.








