தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் ஜப்பானையும், தென்கொரியாவையும் முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் என்று 80 ஆம் ஆண்டுகளில் மலேசியா அறிமுகப்படுத்திய கிழக்கை நோக்கும் கொள்கையில் தற்போது சீனாவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
பொருளாதார மேம்பாட்டிற்கு ஒரு முன்னுதாரண நாடாக சீனா விளங்கி வருகிறது. சீனாவிடமிருந்து நிறைய கற்றுக்கொள்வதற்கு மலேசியா ஆர்வமாக இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.
ஜப்பானுக்கான ஐந்து நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு தற்போது தோக்கியோவில் இருக்கும் பிரதமர் அன்வார், மலேசியாவிற்கு கடல் கடந்த பார்வை வேண்டும் என்ற நோக்கில் 40 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட கிழக்கை நோக்கும் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவினால் அறிமுகப்படுத்தப்பட்ட கிழக்கை நோக்கும் கொள்கை, தற்போது பொருந்தி வராது என்பது அல்ல. மாறாக, அந்த கொள்கையில் ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுடன் சீனாவும் உள்ளடக்கப்பட வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் மலேசிய செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.








