கோலாலம்பூர், செப்டம்பர்.25-
கம்போடியாவிற்கும் தாய்லாந்துக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எளிதாக்குவதில் மலேசியா மேற்கொண்ட முயற்சியானது, மலேசியாவின் வெற்றியையும், ஆசியானின் வலிமையையும் நிரூபிக்கும் ஒரு முக்கியச் சாதனையாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அங்கீகரித்துள்ளார் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
பிராந்திய பிரச்னைகள் குறிப்பாக, கம்போடியா - தாய்லாந்து மோதல் தொடர்பாக தொலைபேசி உரையாடல் வழி விவாதித்த அமெரிக்க அதிபர், இவ்விவகாரத்தைச் சுட்டிக் காட்டியதாக டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
அதே வேளையில் ஆசியான் தலைவர் என்ற முறையில் மலேசியா, இந்த பிராந்திய அமைதியை உறுதிச் செய்வதில் தொடர்ந்து ஒரு முன்னோடிப் பங்களிப்பை வழங்கும் என்று டிரம்பிடம் தாம் உறுதி கூறியதாக டத்தோ ஶ்ரீ அன்வார் தெரிவித்தார்.








