ஜோகூர் மாநிலத் தேர்தலில், பெரிகாத்தான் நேஷனல் வசம் உள்ள புக்கிட் கெப்போங் சட்டமன்றத் தொகுதியைப் பக்காத்தான் ஹரப்பான் கைப்பற்றி சாதனை படைக்கும் என அதன் வேட்பாளர் சி. சுப்ரமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாகோ விளையாட்டு வளாகத்தில் வேட்புமனுத் தாக்கலுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த மூன்று தவணைகளாக பாகோ பி.கே.ஆர் கிளையின் தலைவராக தான் ஆற்றிய மக்கள் பணியும், அப்பகுதி மக்களுடனான நெருங்கிய தொடர்பும் தனக்குச் சாதகமாக இருக்கும் என்றார். இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் மந்திரி பெசாருமான டாக்டர் சாஹ்ருடின் ஜமாலுக்கு இணையாகத் தனக்கும் மக்கள் செல்வாக்கு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தான் வெற்றி பெற்றால், தெருவிளக்குகள் அமைத்தல், சுற்றுலாத் தல மேம்பாடு, மலிவு விலை வீடமைப்பு மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற அடிப்படைப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்கப் போவதாக சுப்ரமணியம் கூறினார். போதிய தொழிற்சாலைகள் இல்லாததால், வேலை தேடி இளைஞர்கள் சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூருக்கு இடம்பெயர்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இதற்கிடையில், கடந்த தேர்தலை விட இம்முறை வாக்காளர்களின் மனநிலை மாறியுள்ளதாலும், கடந்த முறை பாரிசான் நேஷனலின் வெற்றிப் பெரும்பான்மை குறைவாக இருந்ததாலும், பக்காத்தானுக்கு இத்தொகுதியில் நல்ல வெற்றி வாய்ப்பு உள்ளதாக சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யுனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.








