பெட்டாலிங் ஜெயா, ஜூலை.19-
இலக்கவியல் அமைச்சர், மாண்புமிகு கோபிந்த் சிங் டியோ, இன்று சன்வே பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேசிய செயற்கை நுண்ணறிவு போட்டி 2025 -ஐ அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்தார். தேசிய ரீதியிலான இந்த இறுதிச் சுற்றில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபெற்றனர்.
இலக்கவியல் தொழில்நுட்ப உலகில் காலடி எடுத்து வைக்க வேண்டும் அதற்கு நாம் தயாராக வேண்டும் என்கிற நிலை மாறி, செயற்கை நுண்ணறிவு இலக்கவியல் தொழில்நுட்ப உலகில் நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதே உண்மை. அதற்கான கட்டமைப்புகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்க இலக்கவியல் அமைச்சு தயாராக இருக்கும் நிலையில், மலேசியர்கள், குறிப்பாக மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் இலக்கவியல் தொழில்நுட்பத்தை அன்றாட வாழ்வில் பயன்படுத்தத் துவங்க வேண்டும் என அமைச்சர் கேட்டுக் கொண்டார். குறிப்பாக பள்ளி மாணவர்கள் இந்தச் செயற்கை நுண்ணறிவுத் திறனை வளப்படுத்திக் கொள்வது சிறப்பு என அமைச்சர் கூறினார்.
இடைநிலைப்பள்ளி மேல்நிலை மாணவர்களும், உயர்கல்விக்கழகங்களின் அடிப்படைக்கல்வி மாணவர்களும் இந்தப் போட்டியில் பங்குகொண்டனர். இந்தப் போட்டி கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்டது. முதல் கட்டத்தில் 2500 மாணவர்கள் நாடு தழுவிய ரீதியில் பங்கெடுத்தனர். பங்கெடுத்த மாணவர்களுக்கு முறையான பயிற்சிகளும் பட்டறைகளும் வழங்கப்பட்டன. பின்னர் தேர்வு பெற்ற மாணவ அணிகளின் கண்டுபிடிப்புகள் இன்று காட்சிக்கு வைக்கப்பட்டன.








