Jan 7, 2026
Thisaigal NewsYouTube
16 மாத குழந்தைக்குப் பிறப்புச் சான்றிதழ்: தாயின் நீண்ட போராட்டத்திற்கு வெற்றி
தற்போதைய செய்திகள்

16 மாத குழந்தைக்குப் பிறப்புச் சான்றிதழ்: தாயின் நீண்ட போராட்டத்திற்கு வெற்றி

Share:

உலு சிலாங்கூர், ஜனவரி.06-

சிலாங்கூர், உலு சிலாங்கூரில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்வில், 16 மாதக் கைக்குழந்தைக்குப் பிறப்புச் சான்றிதழை உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் நேரடியாக அக்குழந்தையின் வீட்டிற்குச் சென்று வழங்கினார்.

அக்குழந்தையின் 24 வயது தாயார் நூர் ஹகிகா இஸ்மாயில் என்பவராவார். இவர் தனது ஏழு உடன்பிறப்புகளுடன் நீண்ட காலமாக அடையாள ஆவணமான மைகாட் இல்லாமல் போராடி வந்தவர். அண்மையில்தான் தேசியப் பதிவுத் துறையான ஜேபிஎன் மூலம் அந்தப் பெண்மணிக்கு மைகாட் கிடைத்தது.

தாயாருக்கு முறையான அடையாள அட்டை கிடைத்த உடனேயே, அவர் தனது 16 மாதக் கைக்குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் மற்றும் 'மைகிட்' அட்டையைப் பெற நடவடிக்கை எடுத்தார். குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் 24 மணி நேரத்தில் அங்கீரித்து இருப்பது குறித்து அந்த பெண்மணியும், அவரின் கணவரும் பெருமிதம் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் பேசிய உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின், கடந்த ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 9,528 பிறப்புப் பதிவுகள், தாமத வழக்குகளாகப் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.

பதிவுச் செய்யப்படாத திருமணங்கள் மற்றும் சட்ட நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததே இத்தகைய சிக்கல்களுக்கு முக்கியக் காரணம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

முறையான ஆவணங்கள் இல்லாததால் அப்பாவிக் குழந்தைகள் கல்வி மற்றும் மருத்துவ வசதிகளைப் பெறுவதில் சிக்கல்களைச் சந்திக்க நேரிடுவதாகவும், எனவே பெற்றோர்கள் திருமணப் பதிவு மற்றும் குழந்தைகளின் பிறப்புப் பதிவை உரிய நேரத்தில் செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் மீண்டும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் பேசிய குழந்தையின் தாயார் நூர் ஹகிகா இஸ்மாயில், தனது 16 மாதக் குழந்தைக்கு இறுதியாகப் பிறப்புச் சான்றிதழ் கிடைத்ததை எண்ணி தான் பெரும் நிம்மதி அடைந்துள்ளதாகவும், இதற்காக அரசாங்கத்திற்கும் உள்துறை அமைச்சிற்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதாகவும் கூறினார்.

தமக்கு அடையாள அட்டை கிடைக்காததால் தனது குழந்தையும் எதிர்காலத்தில் கல்வி மற்றும் மருத்துவ வசதிகளைப் பெற முடியாமல் போய்விடுமோ என்று தான் அஞ்சியதாகவும், இப்போது அந்தப் பயம் நீங்கி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related News

16 மாத குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ்: தாயின் நீண்ட போரா... | Thisaigal News