லாஹாட் டாத்து, ஜனவரி.23-
சபா, லாஹாட் டாத்துவில் உள்ள ஜாலான் பந்தாய் பகுதியில் இன்று காலை பிக்கப் வாகனம் ஒன்று கட்டுமானப் பணிக்காகத் தோண்டப்பட்டிருந்த ஆழமான பள்ளத்தில் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
இன்று காலை 7 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில், வாகனத்தில் பயணித்த அல்மாடி ஹசான் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதிச் செய்யப்பட்டது. வாகனத்தை ஓட்டிச் சென்ற வில்யாமில் அஹாஜுல் என்பவருக்குக் கை முறிவு ஏற்பட்டது.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், லாஹாட் டாத்து தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 14 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சபா கழிவுநீர் மற்றும் வடிகால் துறையினரால் தோண்டப்பட்டிருந்த அந்தப் பள்ளத்தைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த சாலைத் தடுப்புகளை மோதித் தள்ளியபடி, வாகனம் பள்ளத்திற்குள் பாய்ந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தீயணைப்பு, மீட்புத்துறையினர் தெரிவித்தனர்.








