தீபாவளியை முன்னிட்டு, உலுகிந்தா சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சுமார் 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அதன் சட்டமன்ற உறுப்பினர் முஹமட் அராஃபாட் வரிசை மஹமட் கூறினார்.
தீபாவளியை முன்னிட்டு மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டதுடன், தொகுதிக்கு உட்பட்ட ஆலயங்களுக்கும் பல்வேறு நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளாக நீடித்து வந்த ஓர் ஆலயத்தின் கட்டிடப் பிரச்சினைக்குத் தீர்வு காண மானியம் வழங்கப்பட்டதாக அராஃபாட் தெரிவித்தார்.
நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருந்த இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் நிலம் தொடர்பான சிக்கல்களும், அரசாங்கத்தின் ஒப்புதல் பெறுவதில் ஏற்பட்ட தாமதங்களும் பெரும் சவால்களாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
பேரா, தஞ்சோங் ரம்புத்தான், ஸ்ரீ முருகன் கோயிலில் தமது தொகுதிக்கு உட்பட்ட இந்தியர்களுக்கு 2026ஆம் ஆண்டுக்கான தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அராஃபாட் இதனைத் தெரிவித்தார்.

இருப்பினும், ஆலயத்தின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், இதே போன்று தொகுதியில் உள்ள பல்வேறு ஆலயங்களின் தேவைகளைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வு காணும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அராஃபாட் தெரிவித்தார்.
மேலும், இந்து சமய ஆலயங்களின் பதிவு தொடர்பான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது 17 ஆலயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பதிவு செய்யப்படாத ஆலயங்களைப் பதிவு செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.








