வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் குடிநுழைவு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளிலிருந்து பாதுகாப்பதற்காக, சுமார் ஒரு மில்லியன் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு அரசு அமலாக்க அதிகாரிகள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், நேற்று சிலாங்கூர், ஜோகூர் மாநிலங்களில் நடத்திய நடவடிக்கைகளில், 40 முதல் 60 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் மூவர் வெளிநாட்டுத் தொழிலாளர் விவகாரங்களைக் கையாளும் முகவர்கள் ஆவர்.
2018 முதல் 2025ஆம் ஆண்டு வரை 44 இணையப் பணப் பரிமாற்றங்கள் மூலம் சுமார் ஒரு மில்லியன் ரிங்கிட் கைமாறியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஐவரும் நவம்பர் 1ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.








