சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகத் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்து வரும் ஒன்பது மலேசியத் தாய்மார்களின் தியாகத்துக்கும் அர்ப்பணிப்புக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 25ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெற்ற கிவானிஸ் கிளப் தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலின் 2026ஆம் ஆண்டுக்கான அனுகெரா ஈபு கிவானிஸ் விருது நிகழ்ச்சியில் ஏஷ்லே பாங் யெக் ஸி, டத்தின் ஹஸ்னா அப்துல் ரஹ்மான், கேத்தரின் ஹோ சுய் மீ, ஜோய்ஸ் லிம் லே குவான், நானீச்சரம் முனியாண்டி, எலாஹே நோர்மான், ராஜேஸ்வரி பரமசிவம், திலகவதி கார்மேகம், ஸுரைனி அனுவார் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
மன இறுக்கம், டவுன் சிண்ட்ரோம், கற்றல் மற்றும் வளர்ச்சிக் குறைபாடுகள் உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்ளும் பிள்ளைகளை வளர்த்து வரும் இத்தாய்மார்கள் ஒவ்வொருவருக்கும் தலா 2,000 ரிங்கிட் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
2001ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விருது, பிள்ளைகளின் நலனுக்காகப் போராடுவதுடன், மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் முன்னேற்றத்துக்கும் பங்களிக்கும் தாய்மார்களின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டுகிறது.








