மலேசியாவில் உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் ‘சுகர் பேபி’ எனப்படும் சமூக சீர்கேட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் ஆய்வு அறிக்கை ஒன்றை உயர்கல்வி அமைச்சு ஆராயவுள்ளது.
இது குறித்து உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காடிர் கூறுகையில், இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்த விரிவான தகவல்கள் அமைச்சிடம் தற்போது இல்லை என்றார்.
இருப்பினும், சம்பந்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட கூடுதல் விவரங்களைப் பெற அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று 2027-ஆம் ஆண்டுக்கான விநியோக மசோதா மீதான கொள்கை நிலை விவாதத்தில் பேசிய ஸம்ரி அப்துல் காடிர், இத்தகவலைப் பகிர்ந்துள்ளார்.
முன்னதாக, பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் விபச்சாரத்துடன் தொடர்புடைய ‘சுகர் பேபி’ நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறி, மாணவர்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடும் பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது.
இந்நிலையில், இந்த விவகாரத்தை அமைச்சு தீவிரமாகக் கருதுவதாகக் குறிப்பிட்ட ஸம்ரி, ஆய்வில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் உண்மைத்தன்மை சரிபார்க்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
மேலும், ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கைகள் மதிப்பீடுகளாக இருக்கலாம் என்றும், அவை உண்மையான மாணவர்களின் எண்ணிக்கையைப் பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் ஆய்வின் வழிமுறைகள், ‘சுகர் பேபி’ நடவடிக்கைகளுக்கான வரையறைகள் மற்றும் வெளியிடப்பட்டுள்ள எண்ணிக்கைகள் மதிப்பீடுகளா என்பன குறித்து ஆராய்ந்து கூடுதல் தகவல்கள் பெறப்படும் என்றும் ஸம்ரி அப்துல் காடிர் தெரிவித்துள்ளார்.








