லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதியில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சுமார் 1,600 குடும்பங்களுக்கு தலா 150 ரிங்கிட் மதிப்பிலான வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன.

இதன் முதற்கட்டமாக 300-க்கும் மேற்பட்டோருக்கு வவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளதாக அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், தொடர்புத் துறை அமைச்சருமான டத்தோ ஶ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.

மேலும், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்தியச் சமூகத்தின் பொருளாதார மேம்பாட்டிற்காக, அமானா இக்தியார் மலேசியா மற்றும் தெக்குன் நேஷனல் மூலம் 150 மில்லியன் ரிங்கிட் தொழில் நிதியும், மித்ரா அமைப்புக்கு 150 மில்லியன் ரிங்கிட் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்று இரவு நடைபெற்ற தீபாவளி உதவி வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர் ஃபாஹ்மி ஃபாட்சீல் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், மித்ரா மானியங்கள் மற்றும் உதவிகளுக்கு விண்ணப்பிப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து பொதுமக்களின் கருத்துகளும் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ரஹ்மா ரொக்க உதவித்தொகையான எஸ்டிஆர், அடிப்படை ரஹ்மா உதவித் தொகையான சாரா மற்றும் தமிழ்ப்பள்ளிகளைப் பழுதுபார்க்கும் நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும், இந்திய சமுதாயத்தின் நலனுக்காக செயல்படுத்தப்படுவதாகவும் ஃபாஹ்மி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தாமான் ஸ்ரீ செந்தோசாவில் உள்ள AC4 அடுக்குமாடிக் குடியிருப்பில் பழுதடைந்த மின்தூக்கியை மாற்றுவதற்கு வீடமைப்பு மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பணிகள் தொடங்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.








