கேஎல்ஐஏவில் நடந்த சர்ச்சைக்குரிய சம்பவத்தின் காணொளி கசிந்த விவகாரம் தொடர்பான போலீஸ் துறையின் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை இன்று சட்டத்துறை தலைவரின் அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
காணொளியில் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமை எனப்படும் ஏகேபிஎஸ் தலைமை இயக்குநர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஷுஹைலி முஹமட் ஸையின், கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி கேஎல்ஐஏவில் ஒருவரைக் கண்டித்த காட்சி இடம்பெற்றுள்ளது.
இந்த காணொளி எவ்வாறு கசிந்தது, அதன் மூல ஆதாரம் என்ன, பின்னர் அது எவ்வாறு பரவியது என்பது குறித்தும் போலீஸ் துறை விசாரித்து வருவதாக சைஃபுடின் தெரிவித்தார்.
கேஎல்ஐஏ மற்றும் கேஎல்ஐஏ2-இல் உள்ள 5,000-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் கட்டுப்பாட்டில் இருப்பதால், காணொளி அங்கிருந்து கசிந்ததா அல்லது வேறு வழியில் பதிவு செய்யப்பட்டதா என்பதும் விசாரணையில் ஆராயப்படும் என்றார்.
இதற்கிடையே, கேஎல்ஐஏவின் பிரதான கண்காணிப்பு அறைக்கு ஏகேபிஎஸ் அதிகாரிகள் அணுகல் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், பாதுகாப்பு குறைபாடுள்ள பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் சைஃபுடின் தெரிவித்தார்.








