இந்தோனேசியாவின் அனாக் கிராகாத்தாவ் எரிமலையில் இருந்து வெளியாகும் நச்சுத்தன்மை கொண்ட எரிமலைச் சாம்பல் மலேசிய வான்பரப்பை நோக்கி நகர்வதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவலில் உண்மையில்லை என மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியாவின் தலைமை இயக்குநர் ஹிஷாம் அனிப் தெரிவித்துள்ளார்.
தற்போதைய கண்காணிப்பின்படி எரிமலைச் சாம்பல் சுமத்ராவின் வடமேற்குப் பகுதியில் உள்ள இந்தியப் பெருங்கடலை நோக்கி நகர்வதாகவும், மலேசிய தீபகற்பம், சபா அல்லது சரவாக் பகுதிகளை நோக்கி நகரவில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேவேளையில் எரிமலை நிலவரம் ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரில் உள்ள அனைத்துலகக் கண்காணிப்பு மையத்தால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் ஹிஷாம் அனிப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அனாக் கிராக்காத்தாவ் எரிமலை வெடிப்புக்கும் எல் நினோ நிகழ்வுக்கும் தொடர்பில்லை என்று விளக்கமளித்துள்ள அவர், இரண்டும் ஒரே காலகட்டத்தில் ஏற்பட்டதால் அவற்றைத் தொடர்புபடுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.








