ஜன.12
கோலாலம்பூர், தாமான் கொப்பெராசி போலிஸ் ஃபாசா டுவா வில் நிறுத்தப்பட்டு இருந்த கூட்டரசு நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவரின் அதிகாரப்பூர்வ காரின் எண் பட்டை, நீதித்துறை சின்னம் ஆகியவை சேதப்படுத்தப்பட்டது தொடர்பில் 15 வயது மதிக்கத்தக்க இரண்டு ஒன்றுவிட்ட சகோதரர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த நீதிபதியின் கார் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக நேற்றுமுன்தினம் இரவு 8.50 மணியளவில் கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு D7 ( டி செவன் ) போலீஸ் பிரிவு அனுப்பப்பட்டதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் சுகர்னோ முஹமாட் சஹாரிதெரிவித்தார்.
நீதிபதி காரின் எண் பட்டை கூர்மையான பொருளினால் கீறப்பட்டதுடன் நீதித்துறை சின்னம் பெயர்க்கப்பட்டு, சேதப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக ஆராய்ந்ததில் 15 வயது மதிக்கத்தக்க இரு ஒன்றுவிட்ட சகோதர்கள் நடத்திய அராஜகச் செயல் என்பது தெரியவந்தது. பந்து விளையாட்டு முடிந்து அவ்வழியே திரும்பிக்கொண்டு இருந்த அவ்விரு சகோதர்களும் இச்சோதத்தை விளைவித்து உள்ளனர்.
அவ்விரு நபர்களில் ஒருவர் தனது அண்ணனுக்கு நீதித்துறை சின்னத்தை பரிசாக கொடுப்பதற்காக நீதிபதி காரிலிருந்து அந்த சின்னத்தை பெயர்த்துள்ளார்.
ஏற்கனவே போலீஸ் குற்றப்பதிவை கொண்டுள்ள அவர்கள், விசாரணைக்காக தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அஹ்மட் சுக்ரனொ தெரிவித்தார்.








