Sep 21, 2026
Thisaigal NewsYouTube
 பெர்கெசோ டாயா கெர்ஜாயா 2.0 மோசடி: 100-க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்படலாம் / எஸ்.பி.அர்.எம் தகவல்
தற்போதைய செய்திகள்

பெர்கெசோ டாயா கெர்ஜாயா 2.0 மோசடி: 100-க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்படலாம் / எஸ்.பி.அர்.எம் தகவல்

Share:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.அர்.எம் , சமூகப் பாதுகாப்பு நிறுவனமான பெர்கெசோ- வின் ''டாயா கெர்ஜாயா 2.0' ஊக்கத்தொகைத் திட்டத்தில் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடு செய்த நபர்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இந்த மோசடி தொடர்பாகக் குறைந்தபட்சம் 100 பேர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பகாங், பேராக், கிளாந்தான் மற்றும் கெடா ஆகிய மாநிலங்களில் 13 சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பேராக், பினாங்கு, கோலாலம்பூர் மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் மேலும் 16 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

நாடு தழுவிய அளவில் இந்த விசாரணை தொடர்வதால், இம்மாதம் முழுவதும் மேலும் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எஸ்.பி.அர்.எம் உறுதிப்படுத்தியுள்ளது.

முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் இந்த ஊக்கத்தொகைத் திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்திய பல தனிநபர்கள் இதில் அடங்குவர். "அனைத்து விசாரணை ஆவணங்களும் மறுஆய்வுக்காகவும், அடுத்தகட்ட நடவடிக்கைக்காகவும் அரசுத் தரப்பு துணை வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன," என்று எஸ்.பி.அர்.எம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த போலி உரிமைகோரல்கள் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 45 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம், எஸ்.பி.அர்.எம் தலைமை ஆணையர் டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலீம் அமான் வெளியிட்ட தகவலின்படி, சுமார் 1,638 நிறுவனங்கள் இந்த மோசடி தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகின்றன.

மாற்றுத்திறனாளிகள், பரோலில் உள்ளவர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களின் தனிப்பட்ட தரவுகள் அவர்களின் அனுமதியின்றி திருடப்பட்டு, இந்தத் திட்டத்தின் கீழ் பணம் பெறப் பயன்படுத்தப்பட்டுள்ளன. தொழிலாளர்களின் பெயர்களில் முழு ஊக்கத்தொகையும் பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு 50 ரிங்கிட் முதல் 2,400 ரிங்கிட் வரை மட்டுமே ஒருமுறை மட்டும் வழங்கி ஏமாற்றியுள்ளனர்.

கடந்த ஜூன் மாத நிலவரப்படி, எஸ்.பி.அர்.எம் 63 விசாரணைப் கோப்புகளைத் திறந்து, 11 முகவர்கள் மற்றும் 86 நிறுவன உரிமையாளர்கள் உட்பட மொத்தம் 97 பேரைக் கைது செய்துள்ளது. இவர்களில் 77 பேர் விசாரணைக்காகக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். போதிய ஆதாரங்கள் உள்ள அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதை உறுதிப்படுத்த எஸ்.பி.அர்.எம் தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

Related News