ஷா ஆலாம், அக்டோபர்.26-
கெசாஸ் விரைவுச் சாலையில், கிள்ளான் நோக்கிச் செல்லும் பாதையில், இன்று அதிகாலை 3.35 மணியளவில் நடந்த விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த 15 வயதுச் சிறுவன் ஒருவன் தான் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து, பின்னால் வந்த மேலும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில், பரிதாபமாக உயிரிழந்தான்.
சம்பவ இடத்தில் உயிரிழந்த அந்தச் சிறுவன், விபத்துக்குள்ளான பின் சாலையின் நடுவில் வீசப்பட்டதாகவும், பின்னர் மோதிய அந்த இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் அடையாளம் காணப்படாத நிலையில், உடனடியாகச் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டதாகவும் நம்பப்படுவதாக கிள்ளான் செலாத்தான் மாவட்டக் காவற்படையின் துணைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் கமாலரிஃபின் அமான் ஷா தெரிவித்தார். தப்பியோடியவர்கள் விபத்து நடந்த போது பந்தயத்தில் ஈடுபட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாகவும், விபத்தின் உண்மையான காரணத்தைக் கண்டறிய சாட்சிகள் அல்லது தொடர்புடையவர்கள் முன்வந்து உதவ வேண்டும் என்றும் காவற்படை கேட்டுக் கொண்டுள்ளது.








