கோலாலம்பூர், செப்டம்பர்.02-
ஜோகூர், ஸ்கூடாய், மலேசிய தொழிற்நுட்ப பல்கலைக்கழகத்தின் பலாப்ஸ் (Palapes) பயிற்சி மாணவர் ஷம்சுல் ஹரிஸ் ஷம்சுடின் மரணம் தொடர்பில் விசாரணை நல்ல முறையில் நடைபெறுவதற்கு அனைத்து தரப்பினரும் இடம் அளிக்க வேண்டும் என்று போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ காலிட் இஸ்மாயில் கேட்டுக் கொண்டார்.
கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் அறிக்கைக்காக போலீசார் காத்திருப்பதாகவும், விசாரணை முடிவு எதுவாக இருந்தாலும் அதனைப் போலீஸ் துறை பெறும் என்று அவர் குறிப்பிட்டார்.
பயிற்சி மாணவரின் மரணம் தொடர்பில் இதுவரை கிடைக்கப் பெற்ற தகவல்கள் யாவும் செவி வழி கேட்டதே தவிர இன்னும் எழுத்துப்பூர்வமான அறிக்கை எதுவும் கிடைக்கவில்லை என்று ஐஜிபி விளக்கினார்.
அந்தப் பயிற்சி மாணவரின் உடலில் நடத்தப்பட்ட இரண்டாவது மருத்துவப் பரிசோதனையில் அவரின் உடலில் காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் டத்தோ நரான் சிங் தெரிவித்து இருந்தார்.








