கோலாலம்பூர், மே.31-
ஹஜ்ஜுப் பெருநாளின் போது, பெர்லிஸ் மந்திரி பெசார் அபு பக்கர் ஹம்சா, ஆக்ரோஷமாக ஓடிய மாடு ஒன்றை துப்பாக்கியால் சுட்ட விவகாரத்தில், மலேசிய கால்நடை மருத்துவச் சங்கம் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என செனட்டர் டாக்டர் ஆர்ஏ லிங்கேஷ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தில் அச்சங்கம் மௌனம் காப்பது ஏமாற்றமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட நடைமுறைகள் மட்டுமல்லாமல், விலங்குகள் நலன் மற்றும் கால்நடைகளை முறையாக கையாளும் விதிமுறைகள் தொடர்பான கேள்விகளையும் எழுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
விலங்குகளின் நலன் மற்றும் சிறந்த கால்நடை மருத்துவ நடைமுறைகள் குறித்த நிபுணத்துவத்தின் அடிப்படையில், இந்த சம்பவம் குறித்து விளக்கமும் கருத்தும் தெரிவிப்பது சங்கத்தின் தொழில்முறை மற்றும் தார்மீகப் பொறுப்பாகும் என்றும் அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.








