அடாம் பாபா சுகாதார அமைச்சராக இருந்தபோது, 104 சுவாச உதவிக் கருவிகளான வென்டிலேட்டர்களைப் பெறப்பட்டதற்கு எந்தவித எழுத்துப்பூர்வ ஒப்பந்தமும் இல்லை எனப் பொதுக் கணக்காய்வுக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்று நிர்வாகம் குறித்த அறிக்கை தொடர்பில், காலாவதியான தடுப்பூசி, பயன்படுத்த முடியாத சுவாச உதவிக் கருவி, அளவுக்கு மீறிய தனிநபர் பாதுகாப்பு உடை ஆகியன குறித்து தகவல் வெளியிட்ட பொதுக் கணக்காய்வுக் குழு தலைவர் மாஸ் எர்மெயாதி சம்சுடின் செய்தியாளர் சந்திப்பில் இதனை உறுதிப்படுத்தினார்.
இதனிடையே, 505 மீலியன் வெள்ளி மதிப்பிலான 8.5 மில்லியன் கோவிட்-19 தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல் கடந்த ஜூன் 1 ஆம் தேதி அவை காலாவதி ஆகிவிட்டதாகவும் பொதுக் கணக்காய்வு குழு தகவல் வெளியிட்டது.
இவ்விவகாரங்கள் குறித்து விளக்கமளிக்க சுகாதார அமைச்சுக்கு 2 மாதங்கள் கால அவகாசம் கொடுகப்பட்டிருந்தது.
இதன் தொடர்பில் பொதுக் கணக்காய்வுக் குழு தயாரிக்கும் 2 அறிக்கைகள் 5 சந்திப்புக் கூட்டங்களில் விவாதிக்கப்படும். அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் தக்கல் செய்யப்படும்.
இப்படி பல்வேறு அரசுத் துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் தனிக்கை செய்து எந்தக் கட்சியின் சார்பும் தலையீடும் இல்லாமல் வெளிப்படையாக அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு தாக்கல் செய்யப்படும் என மாஸ் எர்மியாத்தி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மக்கள் பணம் முறையாக செலவிடப்படுவதை பொதுக் கணக்காய்வுக் குழு உறுதி செய்யும் எனவும் அவர் சொன்னார்.








