கெடா மாநிலம், கோலா கெட்டில் பகுதியில் நான்கு பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட 43 வயதுடைய இந்திய ஆடவர் மீது குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பாக ஐந்து போலீஸ் குற்றப் பதிவுகள் இருப்பதாக கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அட்ஸ்லி பின் அபு ஷா தெரிவித்தார்.
கோலா கெட்டில் பழைய நகர்ப்பகுதியில் அமைந்துள்ள ஹொன்பெய் (Honpei) உணவகத்தின் முன்பாக இன்று அதிகாலை சுமார் 12.15 மணியளவில் இக்கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆரம்பக்கட்ட விசாரணையின்படி, மெரூன் நிற புரோட்டோன் பெர்சோனா காரில் வந்த நான்கு ஆடவர்கள், பராங் எனப்படும் கூரிய வெட்டரிவாள்களுடன் காரிலிருந்து இறங்கி, உயிரிழந்தவரைத் துரத்திச் சென்று சரமாரியாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவரின் உடலில் மொத்தம் 16 வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாகவும், உடலின் சில பகுதிகள் கிட்டத்தட்ட துண்டிக்கப்படும் அளவுக்கு கொடூரமாகத் தாக்கப்பட்டிருந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, உயிரிழந்த 43 வயதுடைய ஆடவர் மீது போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பாக ஏற்கெனவே ஐந்து போலீஸ் பதிவுகள் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், உயிரிழந்தவர் சுயமாகத் தொழில் செய்து வந்தவர் என்றும் டத்தோ அட்ஸ்லி பின் அபு ஷா தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








