கோலாலம்பூர், டிசம்பர்.28-
மலேசியா இந்த ஆண்டின் முதல் 11 மாதங்களிலேயே சுமார் 2.77 ட்ரில்லியன் ரிங்கிட் வர்த்தக மதிப்பை எட்டி, தொடர்ச்சியாக ஐந்தாவது ஆண்டாக 'ட்ரில்லியன்' சாதனையைத் தகர்த்து உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. செமிகண்டக்டர், மருத்துவப் பொருட்கள் ஆகியவைக்கு உலகளாவிய தேவை அதிகரித்துள்ளதால், நாட்டின் ஏற்றுமதி மதிப்பு மட்டும் 1.45 ட்ரில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது எனக் குறிப்பிட்டார் Matrade எனப்படும் மலேசிய வெளிநாட்டு வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் தலைவரான ரீஸால் மெரிகான் நைனா மெரிகான்.
பிரதமர் அன்வார் இப்ராஹிமின் அண்மைய பன்னாட்டுப் பயணங்கள் காரணமாக ஆப்பிரிக்கா, மத்திய ஆசிய நாடுகளுடனான வர்த்தகம் இரண்டு இலக்க வளர்ச்சியைக் கண்டு, மலேசியப் பொருளாதாரத்திற்குப் புத்துயிர் அளித்துள்ளது என்றார். வரும் ஜனவரி மாதம் முழுமையான புள்ளி விவரங்கள் வெளியாகும் போது, மலேசிய வரலாற்றிலேயே இது ஒரு மிகப் பெரிய 'சாதனை ஆண்டாக' அமையும் என ரீஸால் மெரிகான் மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.








