ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.26-
பினாங்கு, பத்து ஃபெரிங்கியில் உள்ள ஃபிரிடம் ஹீல் மலைப்பகுதியின் அருகில் உள்ள ஹப்பி ரோக் காட்டுப் பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த ஓர் ஆணும் ஒரு பெண்ணும் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த இருவரும் வழிதவறிச் சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் ஜோன் சகூன் பிரான்சிஸ் கூறுகையில், இந்தச் சம்பவம் குறித்து இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.38 மணிக்குத் தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாகவும், பாகான் ஜெர்மால் தீயணைப்பு, மீட்பு நிலையத்திலிருந்து ஆறு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தார்.
முதற்கட்ட பணியாக, மலையேறிகளான அந்த ஆணும்,பெண்ணும் வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்து கொண்ட இடத்தை அடிப்படையாகக் கொண்டு தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மாலை 5 மணி நிலவரப்படி, காட்டில் வழிதவறிச் சென்றதாகக் கருதப்படும் அந்த இருவரையும் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருப்பதாகத்ப் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ஜோன் சகூன் பிரான்சிஸ் குறிப்பிட்டார்.








