காஜாங், ஜூலை.30-
ஆசிரியர் ஒருவரைத் தாக்கி, முகத்தில் காயம் விளைவித்ததாக இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த இரண்டாம் படிவ மாணவன் ஒருவன், காஜாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டான்.
14 வயதுடைய அந்த மாணவன், மாஜிஸ்திரேட் ஃபாதின் டயானா ஜாலில் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, மொழிப் பெயர்ப்பாளர் உதவியுடன் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. எனினும் தனக்கு எதிரான குற்றத்தை அந்த மாணவன் ஒப்பினான். குற்றஞ்சாட்டப்பட்ட மாணவன் வயது குறைந்தவன் என்பதால் அவனின் பெயர் வெளியிடப்படுதற்குத் தடை விதிக்கப்பட்டது.
கடந்த ஜுலை 28 ஆம் தேதி மாலை 4.48 மணியளவில் காஜாங் வட்டாரத்தில் உள்ள ஒரு இடைநிலைப்பள்ளியில் 29 வயதுடைய ஆசிரியரை முகத்திலேயே குத்திக் காயத்தை ஏற்படுத்தியதாக அந்த மாணவனுக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு சிறை அல்லது 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 323 பிரிவின் கீழ் அந்த மாணவனுக்கு எதிராகக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அந்த மாணவனின் சார்பில் வழக்கறிஞர் பி. பிரியலதா ஆஜரானார்.
சம்பந்தப்பட்ட மாணவன், குறைந்த வயதுடையவர், இன்னமும் பள்ளிப் படிப்பைத் தொடர வேண்டிய நிலையில் இருப்பதால், அந்த மாணவரைக் குறைந்த ஜாமீனில் விடுவிக்குமாறு வழக்கறிஞர் பிரியலதா, நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.
அந்த மாணவன், ஆசிரியரைத் தாக்கும் காட்சி, சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக, பொதுமக்களின் கவன ஈர்ப்பாக மாறியுள்ளதால் அவன் புரிந்த கடுங்குற்றத்தைக் கருத்தில் கொண்டு, 5 ஆயிரம் ரிங்கிட் ஜாமீன் அனுமதிக்குமாறு பிராசிகியூஷன் தரப்பில் ஆஜரான துணை பப்ளிக் பிராசிகியூட்டர் ஷாஃபிக் முகமட் ஸுல்பாஹ்ரேன், நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.
எனினும் ஒரு நபர் உத்தரவாதத்துடன் அந்த மாணவனை ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிப்பதாக மாஜிஸ்திரேட் ஃபாதின் டயானா ஜாலில் உத்தரவிட்டார்.
உடற்பயிற்சி பாடத்திற்கு மட்டம் போட்ட அந்த மாணவனைக் கண்டித்ததற்காக அம்மாணவன் ஆத்திரமுற்ற நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியரை முகத்திலேயே குத்தும் காட்சியைக் கொண்ட காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.








