மலாக்கா, ஆகஸ்ட்.23-
மலாக்காவில் முகமூடி அணிந்த ஆடவர் ஒருவர், 12 வயது சிறுவனைக் கடத்த முயற்சி செய்ததாகக் கூறப்படுவது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிரிஸ்டப்பர் பாதிட் தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி மலாக்கா, கம்போங் பாயா ஈக்கான் என்ற இடத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தில் பள்ளி செல்லும் 12 வயது மாணவனைக் கடத்தும் முயற்சி நடந்தது தொடர்பில் போலீசார் புகார் பெற்று இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவது போல் இந்தச் சம்பவம் பள்ளியில் நிகழவில்லை. மாறாக அந்தச் சிறுவன் சைக்கிளில் கடையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டு இருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று ஏசிபி கிரிஸ்டப்பர் குறிப்பிட்டார்.








