காவலில் உயிரிழந்த நூரிஸ்வான் ஸுல்கிஃப்லியின் குடும்பத்தினரைப் பிரதிநிதிக்கும் மூன்று வழக்கறிஞர்கள் மீது, தடயவியல் மருத்துவரை மிரட்டியதாகக் கூறப்படும் புகார் தொடர்பில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் இதனைத் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர் மூன்று வழக்கறிஞர்களுக்கு எதிராகக் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும், மருத்துவர் மற்றும் வழக்கறிஞர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில், 42 வயதான நூரிஸ்வானின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை புதன்கிழமை சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்றார்.
நூரிஸ்வானின் உடலில் 21 கடுமையான காயங்கள் கண்டறியப்பட்டதாகப் பிரேதப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








