Nov 2, 2026
Thisaigal NewsYouTube

திவேட் பட்டதாரிகளுக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கும் ஒரே அளவில் ஊதியம்: நிறுவனங்கள் மீது ஜொஹாரி கானி குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
திவேட் பட்டதாரிகளுக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கும் ஒரே அளவில் ஊதியம்: நிறுவனங்கள் மீது ஜொஹாரி கானி குற்றச்சாட்டு

நாட்டில் சில நிறுவனங்கள், திவேட் எனப்படும் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி பயிற்சி பட்டதாரிகளுக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அதே அளவிலான ஊதியத்தையே வழங்குவதாக, நாடாளுமன்றத்தில் இன்று, முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஜொஹாரி அப்துல் கானி தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் பணிகளில் மலேசியர்களை அதிகளவில் ஈடுபடுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இத்தகைய நடவடிக்கைகள் தடையாக இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், சில நிறுவனங்கள், உள்ளூர் தொழிலாளர்களையும், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட தங்குமிடங்களில் தங்க வைப்பதாகவும் அப்துல் கானி குறிப்பிட்டுள்ளார்.

இதனால், அந்தத் தங்குமிடங்களில் வசிக்க விரும்பாத உள்ளூர் பட்டதாரிகள், வெளியே வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும், இதற்காக அவர்கள் கூடுதல் செலவுகளைச் சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மலேசியாவில் தற்போது 26 லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இருப்பதாகவும், 13-ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இலக்கின்படி அந்த எண்ணிக்கையைக் குறைப்பதில் இதுவரை வெற்றி பெறவில்லை என்றும் ஜொஹாரி கானி விவரித்துள்ளார்.

இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, மலேசியாவில் கடந்த 10 முதல் 20 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் சில நிறுவனங்கள் தொடர்ந்து வெளிநாட்டுத் தொழிலாளர்களையே நம்பியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் செய்து வரும் வேலைகளை ஏற்கக்கூடிய வகையில் ஆண்டுதோறும் 4 லட்சத்துக்கும் அதிகமான திவேட் மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளை மலேசியா உருவாக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், குறைந்தபட்ச ஊதியமானது 1,700 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்ட போதிலும், அதனால் பெரிய மாற்றம் ஏற்படவில்லை என்றும் ஜொஹாரி கானி தெரிவித்துள்ளார்.

ஏனெனில், சில முதலாளிகள் திவேட் தகுதி பெற்ற உள்ளூர் தொழிலாளர்களுக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வழங்கும் அதே ஊதியத்தையே தொடர்ந்து வழங்கி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →