இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை, சிறு வணிகர்கள், உணவுக் கடை நடத்துவோர் உள்ளிட்ட சுமார் 3 லட்சம் தொழில்முனைவோருக்கு மொத்தம் 10.7 பில்லியன் ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சின் சார்பில் ஏழு நிதி நிறுவனங்கள் மூலம் மொத்தம் 15 பில்லியன் ரிங்கிட் நிதியுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை 10.7 பில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளதாக அதன் அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்துள்ளார்.
இதில் 3.14 பில்லியன் ரிங்கிட் சிறு அளவிலான நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த நிதியுதவி பெற்ற சுமார் 3 லட்சம் பேரில், 2 லட்சம் பேர், அதாவது மூன்றில் இரண்டு பங்கினர், உணவுக் கடை நடத்துவோர், சிறு வணிகர்கள், கடை உரிமையாளர்கள் உள்ளிட்டவர்கள் என்பதையும் ஸ்டீவன் சிம் சுட்டிக் காட்டியுள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2026-ஆம் ஆண்டுக்கான தேசிய உணவுக் கடை மற்றும் சிறு வணிகர்கள் தின விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் ஸ்டீவன் சிம் இதனைத் தெரிவித்துள்ளார்.








