கோலாலம்பூரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இரண்டு குழந்தைகளைத் தள்ளிவிட்டு தாக்கியதாகக் கூறப்படும் அடையாளம் தெரியாத பெண் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் நேற்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் நிகழ்ந்ததாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் அஸ்வான் அமீன் நோர்டின் தெரிவித்துள்ளார்.
தனது இரண்டு மற்றும் ஏழு வயதுடைய குழந்தைகளுடன் தந்தை ஒருவர் வணிக வளாகத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத பெண் ஒருவர் திடீரென பின்னால் இருந்து அவரது மகனைத் தள்ளியதாகக் கூறப்படுகின்றது. இதில் அந்தச் சிறுவன் கீழே விழுந்துள்ளார்.
மேலும், அப்பெண் இரண்டு வயதுடைய அவரது மகளின் முதுகுப் பகுதியிலும் தாக்கியதாக அக்குழந்தைகளின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் நேற்று மாலை 7.39 மணிக்கு பதிவு செய்யப்பட்டதாக அஹ்மாட் அஸ்வான் அமீன் நோர்டின் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பரவிய இச்சம்பவத்தைத் தீவிரமாகக் கருதுவதாகவும், உண்மையான காரணத்தைக் கண்டறிந்து சம்பந்தப்பட்ட பெண்ணை அடையாளம் காண விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








