நாட்டின் ரயில்வே சேவைக் கட்டமைப்பை உருவாக்குவதில் இந்தியச் சமூகத்தினர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது என்று தேசிய ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்துள்ளார். காலனித்துவ ஆட்சிக் காலம் தொடங்கி பல தலைமுறைகளாக ரயில்வே துறையில் இந்தியர்கள் ஆற்றிய சேவையைப் பாராட்டிய அவர், ரயில்வே பணியாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு நன்றியும் தெரிவித்தார்.
கேஎல் சென்ட்ரலில் இன்று நடைபெற்ற கேடிஎம்பியின் தீபாவளி திருநாளையொட்டி சிறப்பு காணொளி வெளியீடு மற்றும் இடிஎஸ் பயணிகளுக்கு 600 அன்பளிப்புப் பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்தார். 'சஹாயா 2 ஜீவா’ எனும் காணொளி, இன நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
கேடிஎம்பி நிறுவனம் தீபாவளியை முன்னிட்டு முன்னெடுத்து வரும் சமூக நல்லிணக்க முயற்சிகளையும் துணை அமைச்சர் யுனேஸ்வரன் வெகுவாக பாராட்டினார். குறிப்பாக, பல்வேறு இன மக்களிடையே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் வளர்க்கும் வகையில் காணொளி வெளியீடு மற்றும் பயணிகளுக்கு அன்பளிப்புப் பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும் யுனேஸ்வரன் தெரிவித்தார்.
ஒன்றுமை உணர்வு என்பது புத்தக வடிவிலோ, காகித வடிவிலோ வந்து விடுவதில்லை.மாறாக, கே.டி.எம்.பி. யின். இது போன்ற உணர்வுகளின் மூலமே மலேசியர்கள் மத்தியில் ஒற்றுமை உணர்வையும், ஒருமைப்பாட்டையும் விதைக்க முடியும் என்று துணை யுனேஸ்வரன் தமது வலியுறுத்தினார்.
இந்நிகழ்வு, உப்சி (UPSI) பல்கலைக்கழக மாணவர்களின் இசைக்குழு மற்றும் புத்ராஜெயா, சுல்தான் ஆலாம் ஷா பள்ளி மாணவர்களின் படைப்பாற்றலுடன் சிறப்பாக நடைபெற்றது.

இதனிடையே கேடிஎம்பி வெளியிட்ட தீபாவளி சிறப்புக் காணொளியின் முதல் பாகம், அனைத்து அதிகாரப்பூர்வ சமூக ஊடகத் தளங்களிலும் இதுவரை 2.3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது என்று கேடிஎம்பி குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ அஸ்லான் ஷா அல் பக்ரி பெருமிதம் தெரிவித்தார்.
காணொளியைப் பார்வையிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்தார். குடும்ப உறவுகள், அன்பு, தியாகம் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் தீபாவளி சிறப்புக் காணொளி, பல்வேறு தலைமுறையினரிடையே குடும்பப் பாசத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது என்று டத்தோ அஸ்லான் ஷா விளக்கினார்.
முதன்முறையாக 'சஹாயா 2 ஜீவா’ என்ற தலைப்பில் கேடிஎம்பி தயாரித்துள்ள இந்தக் காணொளி, குறிப்பாக கேடிஎம் கொமுட்டர் சேவையை அதிகம் பயன்படுத்தும் இளம் தலைமுறையினர், குறிப்பாக ஜென் ஸீ (Gen Z) பிரிவினரைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று டத்தோ அஸ்லான் ஷா தெரிவித்தார்.
இளம் தலைமுறையினரின் மனநிலைக்கு நெருக்கமான கதை சொல்லும் அணுகுமுறையின் மூலம் குடும்பப் பாசம் மற்றும் இன நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை சமூகத்தின் அனைத்துத் தரப்பினரிடமும் கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கம் என டத்தோ அஸ்லான் ஷா குறிப்பிட்டார்.








