Jul 16, 2026
Thisaigal NewsYouTube
ரோஹிங்கியா அகதிகள் பிரச்சினை: ஐநா அமைப்பின் மந்தமான செயல்பாடே காரணம் –  அமைச்சர்  சைஃபுடின் அதிரடி சாடல்
தற்போதைய செய்திகள்

ரோஹிங்கியா அகதிகள் பிரச்சினை: ஐநா அமைப்பின் மந்தமான செயல்பாடே காரணம் – அமைச்சர் சைஃபுடின் அதிரடி சாடல்

Share:

ஐநா அகதிகள் உயர் ஆணையத்தின் மறுகுடியேற்ற விகிதம் மிகவும் குறைவாக இருப்பதே, ரோஹிங்கியாக்கள் உள்ளிட்ட அகதிகள் மலேசியாவில் நீண்டகாலமாகத் தங்கியிருப்பதற்குக் காரணம் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

அகதிகளைப் பதிவு செய்வது மற்றும் அவர்களைப் பாதுகாப்பான மூன்றாவது நாடுகளுக்கு அனுப்பி வைப்பது ஆகிய இரு முக்கியக் கடமைகளை ஐ.நா. அகதிகள் உயர் ஆணையம் கொண்டுள்ளது. எனினும், அந்த அமைப்பு அகதி அட்டைகளை வழங்கும் வேகத்தோடு ஒப்பிடுகையில், அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதன் காரணமாகவே, மாற்று வழி இன்றி ரோஹிங்கியாக்கள் மலேசியச் சமூகத்தினரிடையே வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் 'ரோஹிங்கியாக்களைக் கைது செய்வோம்' என்ற பிரசாரம் குறித்துப் பேசிய சைபுடின், நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் சமூக நலனில் அகதிகள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்துப் பேசப் பொதுமக்களுக்கு உரிமை உண்டு என்றார். மேலும், இவர்கள் சட்டவிரோதக் குடியேறிகளைப் போன்றவர்கள் அல்ல என்றும், தங்களின் சொந்த நாட்டில் நிலவும் உள்நாட்டுப் போர் காரணமாகவே இங்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இப்பிரச்சினையைக் கையாள, இனிமேல் ஐ.நா. அகதிகள் உயர் ஆணையத்தின் தரவுகளை மட்டுமே நம்பியிருக்காமல், மலேசிய அரசாங்கம் அகதிகள் குறித்த தங்களின் சொந்தத் தரவு சேகரிப்பு முறையை அமல்படுத்தி வருவதாக சைஃபுடின் தெரிவித்தார்.

மலேசியாவின் உள்நாட்டுச் சட்டங்களுக்கு ரோஹிங்கியாக்களும் கட்டுப்பட்டவர்களே என்றும், அவர்கள் சட்டத்தை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.

Related News