கோலாலம்பூர், ஆகஸ்ட் 24-
கோலாலம்பூர் மஸ்ஜிட் இந்தியாவில் நேற்று காலையில் நடைப்பாதை இடிந்து விழுந்து, அகன்ற குழியில் விழுந்து காணாமல் போன 48 வயது இந்தியப் பிரஜையான விஜயலெட்சுமியை தேடும் முயற்சி 34 மணி நேரத்திற்கும் பிறகும் வெற்றியளிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து நிலத்தடி பாதாள சாக்கடைகளில் மீட்பு நடவடிக்கையில் நிபுணத்துவம் பெற்றவர்களான 6 முக்குளிப்பவர்கள் இன்று மாலையில் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
மலேசிய தீயணைப்பு, மீட்புப்படையினரின் நிபுணத்துவக் குழுவினராக கருதப்படும் 6 முக்குளிப்பவர்கள், சுவாசக் களன்கள் பொருத்தப்பட்ட நிலையில் அந்த வர்த்தகத் தளத்தில் நிலத்தடியும் பாயும் சாக்கடை கால்வாய்களில் அலசி ஆராயும் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.
எனினும் அந்த பாதாள சாக்கடைகளில் மேற்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள தூர்வாரும் கான்கிராட் இரும்பு சிலாப்புகள் ஆறு பகுதிகளில் திறக்கப்பட்டுள்ளதால் நச்சு வாயுவின் வெளியேற்றம் கடுமையாக இருப்பதாக மலேசிய தீயணைப்புப்படை, மீட்புப்படையின் கோலாலம்பூர் பிரிவின் துணை இயக்குநர் ரோஜிஹான் அன்வர் மாமத் தெரிவித்துள்ளார்.
பாதாள சாக்கடைக்குள் பாதுகாப்பு காரணமாக ஒரே நேரத்தில் இரண்டு முக்குளிப்பவர்கள் மட்டுமே களம் இறக்க முடிகிறது. அவர்கள் நச்சு வாயுவை 20 நிமிடத்திற்கு மட்டுமே தாங்க இயலும்.
எனவே ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் இருவர் வீதம் பாதாள சாக்கடைக்குள் இறக்கப்பட்டு வருவதாக இன்று மாலையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் ரோசிஹான் அன்வர் குறிப்பிட்டார்.
பாதாள சாக்கடைக்குள் பாயும் துர்நாற்றமிக்க நீரோட்டம், / மிக குறுகலான கால்வாய், / போதுமான காற்றோட்டம் இல்லாதது முதலிய / ஆபத்து நிறைந்த பெரும் சவால்களை எதிர்கொண்டு, அவர்கள் இந்த துணிகர மீட்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக அவர் மேலும் விவரித்தார்.
பாதாள சாக்கடைக்குள் முக்குளிப்பவர்களின் ஊடுருவல், அவர்களின் உடலில் பொருத்தப்பட்டுள்ள கேமராவின் வாயிலாக மேற்பரப்பு கணினி காட்சியகத்தில் அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த மீட்பு நடவடிக்கை, மிக அபாயகரமானது என்பதால் எல்லா நிலைகளிலும் அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு வருவதாக ரோசிஹான் அன்வர் தெரிவித்தார்.
முக்குளிப்போர்களின் இந்த மீட்பு நடவடிக்கையை பிரதமர் துறையின் கூட்டரசுப்பிரதேச அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா-வும் நேரில் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.








