கோலாலம்பூர், டிசம்பர்.27-
"பண்டைய ரோமானியர்கள் கப்பல் கட்டும் கலையை மலாய்க்காரர்களிடமிருந்துதான் கற்றுக் கொண்டனர்" என்ற ஒரு கருத்தை முன்வைத்து அண்மையில் பெரும் சர்ச்சையை உருவாக்கிய மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் சொலேஹா யாக்கோப், தனது வாதங்கள் அனைத்தும் முறையான ஆய்வின் அடிப்படையிலானவை என்று விளக்கம் அளித்துள்ளார்.
அதே வேளையில் தம்முடைய கருத்துக்கு எதிர்வினையாற்ற விரும்புகின்றவர்கள் அல்லது மாற்றுக் கருத்துக்களைக் கொண்டிருப்பவர்கள் அதை நாகரீகமாக முன்வைக்க வேண்டும் என்றும் சவால் விடுக்கும் வகையில் டாக்டர் சொலேஎஹா பதிவிட்டுள்ளார்.
சீனர்களின் புகழ் பெற்ற 'பறக்கும் குங்ஃபூ' தற்காப்புப் கலைக்கு மலாய்க்காரர்களே மூலாதாரமாக இருந்தனர் என்று டாக்டர் சொலேஹா முன்வைத்த வாதம், சமூக வலைதளங்களில் பெரும் கேலிக்கும் விமர்சனத்திற்கும் உள்ளானது.
தனது கருத்தை சமூக ஊடகங்களில் பலரும் கேலி செய்ததையடுத்து, இது ஓர் "ஊடகத் தாக்குதல்" என்று அரபு மொழி மற்றும் மொழியியல் துறை பேராசிரியரான டாக்டர் சொலேஹா குறிப்பிட்டுள்ளார்.
தனது கருத்துக்கள் அனைத்தும் கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் மேற்கொண்ட விரிவான ஆய்வுகளின் அடிப்படையில் கிடைக்கப் பெற்ற தரவுகளாகும் என அவர் வாதிட்டுள்ளார்.
மலாய் நாகரிகம் என்பது உலக நாகரிகங்களுக்கு முன்னோடியாக இருந்த ஒரு கடல்சார் நாகரிகம் என்பதில் தாம் திடமாக உறுதியாக நம்புவதாக டாக்டர் சொலேஹா ஆணித்தரமாக வலியுறுத்துகிறார்.
குறிப்பாக கிளாசிக்கல் அரபு நூல்களில் இதற்கான ஆதாரங்கள் இருப்பதாக அவர் வலியுறுத்துகிறார். ஆனால், இவர் மேற்கோள் காட்டும் ஆதாரங்கள் மற்றும் ஆய்வுகளில் முறையான அறிவியல் பூர்வமான சான்றுகள் இல்லை என்று பிற வரலாற்று ஆசிரியர்கள் அண்மையில் அவரைக் கடுமையாகச் சாடினர்.








