கோலாலம்பூர், ஜனவரி.03-
நாட்டில் நிலவும் மழைக்கால சூழலைக் கருத்தில் கொண்டு, மின்சார வாகன உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கான விரிவான பாதுகாப்பு வழிகாட்டுதல்களை தெனாகா நேஷனல் பெர்ஹாட்டான TNB இன்று வெளியிட்டுள்ளது.
வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் உள்ள மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் பாதுகாப்பானவை என்று TNB உறுதியளித்துள்ளது.
இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ள நீர் மட்டம் உயரும் போது அந்த பகுதிகளில் உள்ள மின்சார விநியோகத்தை TNB தற்காலிகமாக நிறுத்தும்.
7kW வீட்டு ( 7 KiloWatt Home Charger ) சார்ஜர்களைப் பயன்படுத்தும் உரிமையாளர்கள், தங்களின் மின்சார சுமையைக் குறைக்கும் வகையில் சார்ஜிங் மின்னோட்டத்தை 32A-லிருந்து 20A-ஆகக் குறைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இது பழைய மின்னிணைப்புகள் கொண்ட வீடுகளில் மின் கசிவு அல்லது தீ விபத்துகளைத் தவிர்க்க உதவும்.
இதே போன்று வெள்ள நீர் சூழ்ந்திருக்கும் போது மின்சார வாகனங்களைச் சார்ஜ் செய்வதைத் தவிர்க்க வேண்டும். மின்சாரக் கம்பங்கள் அல்லது நீரில் மூழ்கியிருக்கும் TNB கட்டமைப்புகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
வாகனங்கள் நீரில் மூழ்கியிருந்தால், அவற்றை சுயமாக இயக்க முயற்சிக்காமல் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு சோதனை செய்ய வேண்டும் என்று TNB அறிவுறுத்தியுள்ளது.








