கோலாலும்பூர் - நடிகை அமிசா அஸ்னான் சமீபத்தில் தனது மூத்த மகனை இழந்ததையடுத்து, இக்காலகட்டத்தில் தனக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.
50 வயதான அவர், தனது மகன் என்ட்ரி மிக்காயல் (20) கடந்த பிப்ரவரி 23-இல் மூன்றாம் நிலை நுரையீரல் புற்றுநோய் காரணமாக காலமானதைத் தொடர்ந்து, இந்த இழப்பை சமாளிக்க தனக்கு இன்னும் மனதளவில் ஆதரவு தேவைப்படுவதாக அவர் கூறினார்.
“இரண்டு வாரங்கள் கடந்திருந்தாலும், எனக்கு இன்னும் மனதளவில் ஆதரவு தேவைப்படுகிறது. என்னையும் என் மகனையும் நினைத்து கவலை கொண்ட அனைவருக்கும் நன்றி. இதற்கான பதிலை அளிக்க இயல்வது கடவுள் மட்டுமே,” என்று அவர் உருக்கமாக தெரிவித்தார்.
முன்னதாக, அங்கசாபுரியில் தமது அலுவலகத்தில் தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங், பீனாஸ் எனும் தேசிய திரைப்பட மேம்பாடு கழகத்தின் ‘மடானி கலை நலன் சந்திப்பு’ திட்டத்தின் வாயிலாக அமிசாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இதற்கிடையில், அமிசா மேலும் ஒரு சோதனையை எதிர்கொண்டு வருகிறார். அவரது இரண்டாவது மகன் அட்ரியன் அடாம் (18) எலும்புப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து பேசிய தியோ, இச்சந்திப்பு தமது அமைச்சு ஆதரவு தெரிவிக்கும் நோக்கத்திலும், அவருக்கு சிறிய அளவிலான தனிப்பட்ட நிதி உதவியை வழங்கும் நோக்கத்திலும் நடைபெற்றதாக தெரிவித்தார்.
“அவர் தற்போது மிகவும் கடினமான ஒரு காலத்தை எதிர்கொண்டு வருகிறார். ஒரு தாயாக நான் அந்த உணர்வை புரிந்துகொள்கிறேன். அவர்களின் எதிர்காலம், குறிப்பாக உடல்நலமும் மனநிலையும் நன்றாக பாதுகாக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
பீனாஸின் மடானி கலை நலன் சந்திப்பு திட்டத்தின் மூலம் 2023 முதல் இதுவரை 183 கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் மொத்தம் ரி.ம 144,900 நிதி உதவியை பெற்றுள்ளனர்.
வாழ்வாதாரம் மற்றும் நலன் தொடர்பான ஆதரவு தேவைப்படும் திரைப்படத் துறை கலைஞர்கள் மற்றும் படைப்பாளர்களுக்கு உதவுவதற்காக பீனாஸ் முன்னெடுத்து வரும் முயற்சியாகும்.
மேலும், 2026 ஆம் ஆண்டிற்குள் குறைந்தது 100 கலைஞர்களுக்கு இந்த உதவியை வழங்க பீனாஸ் இலக்கு கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.













