ஈப்போ, பிப்ரவரி.05-
பழைய லாரியை ரகசியக் கிடங்காகப் பயன்படுத்தி வந்த போதைப் பொருள் கும்பலை ஈப்போ மாவட்ட போலீஸ் அதிரடியாக முறியடித்துள்ளது.
ஈப்போ, லாஹாட் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் 17 முதல் 50 வயதுடைய இரண்டு உள்ளூர் ஆண்கள் மற்றும் ஒரு வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டனர்.
அதிகாரிகளின் கண்ணில் படாமல் இருக்க, ஓரத்தில் கைவிடப்பட்ட பழைய லாரி ஒன்றை இவர்கள் போதைப் பொருள் சேமிப்புக் கிடங்காகப் பயன்படுத்தியுள்ளனர்.
அந்த லாரியிலிருந்து 94 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள 32 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது சுமார் 42 ஆயிரம் போதைப் பித்தர்களுக்கு விநியோகம் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது என்று ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் அபாங் ஸைனால் அபிடின் அபாங் அஹ்மாட் இன்று நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
இதற்கிடையே, Tasek Square பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு சோதனையில் methamphetamine போதைப் பொருளுடன் 37 வயது நபர் ஒருவரும் சிக்கினார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் அபாயகர போதைப் பொருள் சட்டம் 39 B பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அபாங் ஸைனால் அபிடின் மேலும் தெரிவித்தார்.








