அலோர் ஸ்டார், ஜனவரி.26-
பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காகக் கெடா மாநிலத்தில் அபராதம் விதிக்கப்பட்டு, சமூக சேவை செய்ய உத்தரவிடப்பட்ட முதல் நபர் என்ற நிலையை இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒருவர் பெற்றுள்ளார்.
39 வயதான கட்டுமானத் தொழிலாளி ஜுஃப்ரி ஸுல்கிஃப்லி, கடந்த ஜனவரி 1-ஆம் தேதி நள்ளிரவு 12.10 மணியளவில், அலோர் ஸ்டார் மெனாரா அலோர் ஸ்டார் கோபுரத்தின் பொது இடத்தில் சிகரெட் துண்டைக் குப்பைத் தொட்டியில் போடாமல் சாக்கடையில் வீசியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டார்.
அலோர் ஸ்டார் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி என். பிரிசில்லா ஹேமாமாலினி முன்னிலையில் நிறுத்தப்பட்ட ஜுஃப்ரி ஸுல்கிஃப்லி, தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். அவருக்கு 300 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தைக் கட்டத் தவறினால் 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அபராதத்துடன் கூடுதலாக, அவருக்கு 6 மணி நேர சமூகச் சேவை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்த இரண்டு மாத காலத்திற்குள், ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஒரு மணிநேரம் என்ற கணக்கில் இந்தச் சேவையை அவர் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக தனது கருணை மனுவில் தனக்கு ஒரு நாளைக்கு 80 ரிங்கிட் மட்டுமே வருமானம் கிடைப்பதாகவும், மூன்று குழந்தைகளைத் தான் கவனித்து வருவதால் தண்டனையைக் குறைக்குமாறும் ஜுஃப்ரி நீதிமன்றத்தில் மன்றாடினார்.








